பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி இருக்கும் விரதம்.
ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதம் .
கன்னிப் பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் எனவும், சுமங்கலி பெண்கள் தன் கணவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தொழில் வேலை சிறப்பாக நடக்க வேண்டும் என விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
வரலட்சுமி பூஜையில் கடைபிடிக்க வேண்டியவை:
- வரலட்சுமி நோன்பு அன்று அதிகாலை எழுந்து பெண்கள் கட்டாயமாக மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.
- ஒரு நெய் தீபம் கண்டிப்பாக வரலட்சுமி பூஜையில் ஏற்ற வேண்டும்.
- அஷ்டமி கரிநாள் எதுவும் வரலட்சுமி விரத பூஜைக்கு பார்க்க தேவையில்லை.
- நோன்பு கயிறு ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும்.
- ஆண்கள் நோன்பு கயிறு கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
- அம்மன் படத்திற்கு மஞ்சள் கிழங்கு தாலி கயிறு அணிவிக்க வேண்டும்.
- வாசலில் இருந்து தான் அம்மனை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.
- வாசலில் அம்மனை தரையில் வைக்கக்கூடாது மனை பலகையில் தான் வைக்க வேண்டும்.
- பெண்களுக்கு கொடுக்கும் தாம்பூலத்தில் ஒரு ரூபாய் நாணயமாவது வைக்க வேண்டும்.
- பூஜை முடிந்து நிறைவாக மகாலட்சுமிக்கு ஆரத்தி கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
- நோன்பு கயிறை பூஜை முடிந்த பிறகு நீர்நிலைகளிலோ அல்லது செடிகளிலோ போடலாம்.
- பெண்கள் கர்ப்பமாக இருந்தால் ஏழு மாதத்திற்கு மேல் பூஜையை தவிர்ப்பது நல்லது.
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் விரதம் இருக்கக் கூடாது பூஜைக்கு தேங்காய் உடைக்க கூடாது எளிமையாக பூஜை செய்யலாம்.
- மாதவிடாய் ஐந்து நாட்கள் முடிந்த பிறகு பூஜை செய்யலாம்.
- பிறப்பு தீட்டு 30 நாள், இறப்பு தீட்டு அம்மா வகையில் 3 நாள் மற்றும் கணவன் வகையில் ஒரு ஆண்டு.
- வரலட்சுமி நோன்பு அன்று தவிர்க்க முடியாத காரணங்களால் பூஜை செய்ய முடியாதவர்கள் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது நவராத்திரியில் வரும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அன்றோ வரலட்சுமி பூஜை செய்யலாம்.
- பாரம்பரியமாக வருடா வருடம் செய்யும் எந்த ஒரு முறையையும் மாற்றக்கூடாது.
வரலட்சுமி நோன்பு கலசம் மற்றும் புனர்பூஜை வழிபாடு:
- புதிதாக கலசம் வைப்பவர்கள் தொடர்ந்து செய்ய முடியும் என்றால் மட்டுமே கலசம் வைத்து வழிபடலாம்.
- முதல் முறை வரலட்சுமி பூஜை செய்பவர்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படம் வைத்து பூஜை செய்யலாம்.
- கலசம் வைக்கும் திசை கிழக்கு மற்றும் வடக்கு. கலசத்திற்கு புது புடவை அணிவிப்பது சிறப்பு.
- கலசத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கண்டிப்பாக வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும்.
- பரம்பரை பரம்பரையாக கலசத்திற்கு பட்டு புடவை உடுத்தி வந்தால் அதைத் தொடர்ந்து செய்யலாம்.
- கலச புடவையை நாம் கோவிலுக்கு செல்லும்போது ஏதேனும் பூஜையில் கலந்து கொள்ளும் போது உடுத்திக் கொள்ளலாம்.
- எப்போதும் வீட்டில் இருக்கும் பூரண கலசம் பயன்படுத்த வேண்டாம் புது கலசம் வைப்பது சிறப்பு.
- படம் வைப்பவர்கள் பூஜை முடிந்து அன்று இரவே மகாலட்சுமிக்கு புனர் பூஜை செய்து விடலாம்.
- கலசம் வைப்பவர்கள் மூன்றாவது நாள் புனர்பூஜை செய்வது சிறப்பு.
- புனர்பூஜை செய்யும்போது வெற்றிலை பாக்கு இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியமாக கட்டாயம் வைக்கவும்.
- புனர்பூஜை செய்யும் நாள் ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் மற்றும் ராகு காலம் எமகண்டமாக இருக்கக் கூடாது.
- புனர்பூஜை செய்து அம்மனை அரிசி பாத்திரத்தின் மீது வைத்து பிரார்த்தனை செய்து திரும்ப பூஜை அறையில் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.
- வேறு ஊர்களுக்கு சென்றாலும் அல்லது உறவினர் வீட்டிற்கு சென்றாலும் அங்கு மகாலட்சுமி படத்திற்கு பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.
- பெண்கள் ஒன்று கூடி பூஜை செய்தால் ஒரு கலசம் மட்டும் வைத்தால் போதும் மற்ற பெண்கள் அனைவரும் அர்ச்சனை மட்டும் செய்து வழிபாடு செய்யவும்.
- தொடர்ந்து பூஜை செய்பவர்கள் ஒரு ஆண்டு பூஜை செய்ய முடியவில்லை எனில் கோவிலுக்கு சென்று நோன்பு கயிறு மட்டும் கட்டிக் கொள்ளலாம்.
வரலட்சுமி விரதம் பூஜை செய்யும் முறை:
- கலசம் வைப்பவர்கள் முதல் நாள் மாலை 6 மணிக்கு மேல் மகாலட்சுமி வீட்டிற்கு அழைப்பது சிறப்பு .
- வரலட்சுமி நோன்பு அன்று காலையிலும் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு அழைக்கலாம்.
- கலசம் இல்லாமல் வழிபடுபவர்கள் வீட்டிலிருக்கும் மகாலட்சுமி படத்திற்கு பூஜை செய்யலாம்.
- பசு சாணம், பஞ்சகவ்யம் அல்லது மஞ்சள் நீர் வாசலில் தெளித்து கோலம் போட வேண்டும்.
- நிலை வாசலில் கண்டிப்பாக மஞ்சள் பூசி குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க வேண்டும்.
- சமையலறையில் முதலில் பால் காய்ச்சவும் அல்லது இனிப்பு பொருட்களை செய்ய வேண்டும்.
- மனை பலகையில் மஞ்சள் பூசி தாமரை கோலம் போட்டு வாழை இலை அல்லது வெற்றிலை வைத்து அதன் மீது பச்சரிசி வைத்து பிறகு அம்மனை அமர வைக்க வேண்டும்.
- அலங்காரம் செய்த பிறகு நல்ல நேரம் பார்த்து வாசலில் இருந்து மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.
- முதலில் மஞ்சள் பிள்ளையார் பூஜை, குலதெய்வ பூஜை செய்த பிறகு மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும்.
- மங்களகரமாக பாரம்பரிய உடையில் பூஜை செய்வது சிறப்பு.
- பானகம் மற்றும் ஏதேனும் ஒரு இனிப்பு கண்டிப்பாக அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
- குங்குமம், அரிசி அட்சதை, நாணயம் மற்றும் பூக்கள் இவற்றில் முடிந்த அர்ச்சனை செய்வது சிறப்பு.
- செவ்வரளி, தாமரை, மாதுளை பழம், பால், பாயாசம், சர்க்கரை பொங்கல், பானகம் மற்றும் கலவை சாதம் பூஜைக்கு சிறப்பானது.
- கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பது படிப்பது மிக மிக சிறப்பு.
- எளிமையாக ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி ஓம் என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.
- பூஜையில் ஒரு தாமரை பூ 11 நாணயம் வைத்து பூஜை செய்து, பூஜை முடிந்த பிறகு அதை அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
- மங்கல பொருட்களை கோவிலுக்கு சென்று அங்கு வரும் பெண்களுக்கும் கொடுக்கலாம்.