ஆடி மாதம் அம்பிகை உமாதேவி அவதரித்த நாள்.
அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வழிபடும் நாள்.
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநாள்.
அம்பிகை அனைத்து ஜீவராசிகளுக்கும் தாய்.
இந்நாளில் அனைத்து சைவ வைணவ கோயில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு விழா மற்றும் உற்சவம் நடைபெறும்.
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே சுக்கிர திசை வந்துவிடும்.
இல்வாழ்க்கைக்கும் குழந்தைப் பேறுக்கும் காரணமானவர் சுக்கிரன்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அம்பிகையை வழிபாடு செய்வது விசேஷம்.
பூர நட்சத்திர நாளில் வழிபடுவதால் சுக்கிரனின் முழு அருளையும் பெறலாம்.
அம்மனுக்கு வளைகாப்பு செய்யும் முறை
ஆடிப்பூரம் வழிபடும் நாள்:
- ஆடிப்பூரம் : ஜூலை 28 – ஆடி 12 திங்கள்
- நாள் : 27/7/2025 மாலை 6:55 முதல் இன்று 28/7/2025 இரவு 8 மணி வரை பூரம் நட்சத்திரம் உள்ளது.
ஆடிப்பூரம் வழிபடும் நேரம்:
- 28/7/2025 காலை 6 மணி முதல் 7.20 வரை
- 28/7/2025 காலை 9 மணி முதல் 10.20 வரை
- 28/7/2025 மாலை 5.30 மணி முதல் 7.30 வரை
யாரெல்லாம் வழிபட வேண்டும்?
- திருமண தோஷம் நீங்க
- தடைபட்ட திருமணம் நடக்க
- குழந்தை பாக்கியம் பெற
- ஆண் குழந்தை வேண்டி
- இரண்டாவது குழந்தை வேண்டி
- மாங்கல்ய தோஷம் நீங்க
- மாங்கல்யம் பலம் பெற
- தீராத நோய்கள் நீங்க
- வாழ்வில் தடைகள் அகல
திரு ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு செய்து வழிபட வேண்டும்.
அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும்.
அம்மன் வளைகாப்புக்கு வளையல் வாங்கி கொடுப்பது சிறப்பு.
வீட்டிலும் நாம் அம்பிகைக்கு வளைகாப்பு விழா செய்யலாம்.
நெய்வேத்தியம் :
- தல வாழை இலை போட்டு தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம், பால், இளநீர், பாயசம், சர்க்கரை பொங்கல், கல்யாண சாதம், கலவை சாதம் இவற்றில் முடிந்தவற்றை வைக்கலாம்
- அல்லது எளிமையாக இனிப்பு கலந்த பால் மட்டும் வைத்தாலும் போதுமானது.
வீட்டில் ஆடிப்பூரம் வழிபாடு செய்யும் முறை:
- வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் படத்தை (மாரியம்மன் மீனாட்சி காமாட்சி ஆண்டாள் பெண் குலதெய்வம்) எடுத்துக்கொள்ளவும்.
- பூஜையறை அல்லது வரவேற்பு அறையில் மஞ்சள் தீர்த்தம் தெளித்து தாமரை கோலம் இட்டு மனை பலகை மீது சிவப்பு நிற துணி பரப்பி வைக்கவும்.
- கிழக்கு முகம் பார்த்து அம்பிகையை மனை பலகையில் அமர வைக்கவும்.
- அம்மன் சிலை அல்லது கலசம் வைத்து வழிபடுபவர்களாக இருந்தாலும் அதில் வைத்துக் கொள்ளலாம்.
- அம்மனுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.
- மஞ்சள் நிற கயிற்றால் கட்டிய வண்ண வளையல் மாலையை அம்மனுக்கு அணிவிக்கவும்.
- வளையல் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.
- மாலை கட்ட தெரியாதவர்கள் வளையலை படத்தின் இருபுறமும் கட்டி விடலாம்.
- அம்மனுக்கு அருகில் இரண்டு குத்து விளக்கு அல்லது அம்மனுக்கு முன் ஒரு காமாட்சி விளக்கு வைக்க வேண்டும்.
- ஒரு சிறு தட்டில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
- பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் இட்டு அருகம்புல் சாற்றவும்.
- இரண்டு வெற்றிலை பாக்கு 2 வாழைப்பழம் ஒரு ரூபாய் நாணயம் சிறிது பூ வைக்க வேண்டும்.
- இனிப்பு கலந்த பால் அல்லது பாயாசம் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
- அம்மனுக்கு நெற்றி கன்னம் கை கால்களில் சந்தனம் குங்குமம் இட்டு பன்னீர் தெளித்து மஞ்சள் அரிசி அட்சதை போட்டு நலங்கு வைக்க வேண்டும்.
- தீப தூப ஆராதனை செய்து அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
- 108 முறை ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம் அல்லது அபிராமி அந்தாதி, திருப்பாவை, திருப்புகழ் படிக்கலாம் கேட்கலாம்.
- அம்மனை மறுபடி பூஜை அறையில் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு விடவும்.
- பிறகு திருமணம் வரன் வேண்டுபவர்கள் அல்லது குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அம்மனுக்கு கீழ்க்கண்ட முறையில் நலங்கு வைத்து வழிபட வேண்டும்.
திருமண வரன் கிடைக்க ஆடிப்பூரம் வழிபாடு:
- திருமண வரம் வேண்டுபவர்கள் வீட்டில் உள்ள அம்மன் படத்தை கிழக்கு பார்த்து மனை பலகையில் அமர்த்தி அம்மனுக்கு நலங்கு வைக்க வேண்டும்.
- அம்மன் அமர்ந்த மனை பலகையில் வெள்ளை நிற துணி பரப்பி அம்மன் மடியில் அமர்வதாக நினைத்து ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அமர வைக்கவும்.
- வீட்டில் உள்ள பெரியவர்கள் அம்மனுக்கு நலங்கு வைத்ததைப் போன்று பிள்ளைகளுக்கும் திருமணம் கைகூட வேண்டும் என்று நலங்கு வைக்கவும்.
- பெண் பிள்ளைகளுக்கு அம்மனுக்கு அணிவித்த வளையல்களை போட்டு பூஜை அறைக்கு சென்று வழிபடவும்.
- ஆண் பிள்ளைகள் பூஜை அறையில் வழிபாடு மட்டும் செய்து கொள்ளவும்.
- திருமண வரம் வேண்டுபவர்கள் நெய்வேத்தியமாக கல்யாண சாதம் படையல் போடலாம்.
குழந்தை பாக்கியம் பெற ஆடிப்பூரம் வழிபாடு:
- குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வீட்டில் அம்மனை மனை பலகையில் அமர்த்தி அம்மனுக்கு நலங்கு வைக்க வேண்டும்.
- அம்மன் அமர்ந்த அதே மனை பலகையில் வெள்ளை நிற துணி பரப்பி பெண்களை மட்டும் மனையில் அமர்த்தி நலங்கு வைக்க வேண்டும்.
- ஆண்கள் மனையில் அமர தேவையில்லை.
- வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது கணவன் நலங்கு வைக்கலாம்.
- புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ஒரு தேங்காய் இரண்டு வாழைப்பழம் வெற்றிலை பாக்கு பூ வைத்து மடி நிறப்பி வழிபாடும் செய்யலாம்.
- அம்மனுக்கு அணிவித்த வளையல்கள் உடன் மற்றும் சில வளையல்களை சேர்த்து போடவும்.
- புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கலவை சாதம் படையல் போடலாம்.
- மடி நிறப்பி வழிபாடு செய்த தேங்காயை இனிப்பு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தவும் காரம் சேர்த்து பயன்படுத்த வேண்டாம்.
சடங்கு முடித்து மங்கள ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து நெய்வேத்தியம் அருந்த வேண்டும்.
வீட்டில் பூஜையை முடித்துவிட்டு அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மன் வளைகாப்புக்கு வளையல் வாங்கி கொடுக்க வேண்டும்.
கோவிலுக்கு வருபவர்களுக்கு வளையல் தானமாகவும் கொடுக்கலாம்.
மஞ்சள் குங்குமம் மாங்கல்ய சரடு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.
அன்னதானம் கூல் கொடுப்பது மிகவும் சிறப்பு.